கடும் பனிச்சரிவு; கரைபுரண்ட வெள்ளம்; 150 பேர் பலியானதாக அச்சம் - உத்தரகாண்ட் சோகம்!

    -MMH
  உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தாதேவி மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் பனிச்சரிவும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அலக்நந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் ஆற்றங்கரையோரத்தில்  இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.   வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் 150 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மக்களைப்  பீதியடையவோ வதந்திகளைப் பரப்பவோ கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பேரிடர் மைய எண் 1070 அல்லது 9557444486-யை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு, மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து உத்தரகாண்ட் முதல்வரிடம் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யத் தயார் என்று உறுதி அளித்துள்ளார்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments