சிங்கம்புணரி அண்ணாநகர் மக்களின் 30 ஆண்டுகால வீட்டுமனை பட்டா கனவு, நனவானது!

-MMH

     சிங்கம்புணரி நகர எல்லைக்குள் இருக்கும் அண்ணாநகரின் ஒரு பகுதி, அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் எல்லைக்குள் வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சாமானிய மக்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. அந்த மக்களும் பட்டா வாங்குவதற்கு பல்வேறு வகைகளில் முயற்சித்து வந்தார்கள்.

இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட சரவணன், 'தான் வெற்றி பெற்றால், அண்ணா நகர் மக்களுக்கு கட்டாயம் வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தரப்படுமென' வாக்குறுதி அளித்தார்.

அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அண்ணாநகர் மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து முயற்சித்தார். அவரது முயற்சிகளில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், திமுக சிறுபான்மை அணி நிர்வாகிகள் கேபிள் சாதிக் மற்றும் எஸ்.எஸ்.இப்ராஹிம் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

இவர்களது முயற்சியைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திரு.பொன்.மணி பாஸ்கரன் அவர்களும் பரிந்துரை செய்ததன் காரணமாக, சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறை அண்ணா நகர் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்தது. பட்டா வழங்கும் விழா காரைக்குடியில் நடைபெற்றது.

விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் P.மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொன்.மணி பாஸ்கரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் முன்னிலையில், கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் G.பாஸ்கரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிச் சிறப்பித்தார்.

30 வருட கனவை நனவாக்க உதவியதற்கு, பரிந்துரைத்த மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணி பாஸ்கர் அவர்களுக்கும், சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு அவர்களுக்கும், பயனாளிகளுக்கு பட்டா கிடைப்பதற்கு பணியாற்றிய அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்  சரவணன் அவர்களுக்கும் பயனாளிகள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.  

-அப்துல்சலாம் & ராயல் ஹமீது.

Comments