கோவை மாநகராட்சியின் அதிரடி..! வரி கட்ட வில்லையா பனிஷ்மென்ட் வேற லெவல்..! அதிர்ச்சியில் வியாபாரிகள்!!
கோவை மாநகராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில் வரி, வாடகை உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்தப்படாத நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் துண்டறிக்கை, ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வசூலித்து வருகின்றனர்.சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் இல்லாத கடைகளுக்கு முன் குப்பை தொட்டி வைத்து ஷாக் கொடுக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கடை உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அழகுமுத்து மற்றும் மாரியப்பன் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
''மாநகராட்சி அதிகாரிகள் தொழில் வரி, கடைகளின் உரிமம் புதுப்பித்தல் போன்ற பிரச்சனைகளில் இதுபோன்ற கண்டிப்பு அவசியம் இல்லை என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் பல வணிக வளாகங்கள் வரி நிலுவை தொகை கட்டாமல் பேச்சுவார்த்தை வழக்கு போன்ற சாதகமான அம்சங்களை பயன்படுத்தி காலம் தாழ்த்துவது நம் கண் முன்னே கண்டு வருகிறோம். கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தினால் சிறு சிறு வியாபாரிகள் மிகவும் தொழில் நலிவடைந்து இப்போதுதான் ஓரளவு நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் சிறு வியாபாரிகளின் கடைகளுக்கு முன் குப்பைத்தொட்டி வைப்பது ஒரு ஆரோக்கியமான வசூல் முறை அல்ல என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
சாரதா மில் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையின் உரிமம் புதுப்பிக்க இந்த மாத கடைசி வரை அவகாசம் உள்ளது. ஆனாலும் அந்த கடையின் முன்பு குப்பைத்தொட்டி வைத்துள்ளது கண்டனத்துக்குரியது. பெரும் நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் சிறிய கடைகளுக்கு அவசரம் காட்டுவது ஏன்? மாநகராட்சி அதிகாரிகள் சிறு வியாபாரிகளுக்கு உதவ முன்வரவேண்டும்''., என்று கூறினார்கள்.
மாநகராட்சி சுகாதார அதிகாரிகளின் கருத்து:-
''சாரதாமில் ரோட்டில் இரண்டு பிரியாணி கடை, பெட்ரோல் பங்க், மதுக்கரை ரோட்டில்உள்ள ஹார்டுவேர் கடை, டைல்ஸ் கடை, பேக்கரி ஆகிய கடைகளில் வரி நிலுவையில் இருப்பதாலும், பல முறை நோட்டீஸ் கொடுத்தும் எந்தவித பதிலும் தராமல், வரி செலுத்தாததாலும் குப்பைத் தொட்டி வைக்கும் நடவடிக்கையினை மாநகராட்சி துணை ஆணையர் உத்தரவின் பேரில் எடுத்துள்ளோம். நிலுவையில் உள்ள வரி கட்டியதும் குப்பை தொட்டி எடுக்கப்படும் என்றனர்''.
-நம்ம ஒற்றன்.
Comments