'ஃபாஸ்டேக்' முறை அமுல்படுத்துவதில் விலக்கு! அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை!!

     -MMH
     கருமத்தம்பட்டி: "கணியூர் சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும்." என,  கலெக்டர் ராஜாமணி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், கணியூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரியில் 'ஃபாஸ்டேக்' முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. உள்ளூர் வாகனங்கள் கட்டணமில்லாமல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கணியூர், அரசூர், கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.


சோமனூரில் நடந்த முத்தரப்பு பேச்சு முடிவில், கலெக்டரிடம் முறையிடப்பட்டது. நேற்று முன்தினம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும், "உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு வேண்டும்" என, வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, "கணியூர், அரசூர் ஊராட்சி மற்றும் கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள சொந்த வாகன உரிமையாளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களைக்  காண்பித்துச்  செல்ல அனுமதிக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments