வருவாய்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

-MMH

     தேனி மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரில் அடிப்படை பயிற்சி மற்றும் நிலஅளவை பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் சுமார் 510 பேர் பணியாற்றி வருகின்றனர். 

அவர்களில் 152 அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக தேனி கலெக்டர் அலுவலகம், பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சில அலுவலகங்களில் குறைந்த அளவில் பணியாளர்கள் வந்திருந்தனர். இருப்பினும் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் மேலும் முடங்க வாய்ப்புள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments