மாப்பிள்ளை சம்பா அரிசி வேற லெவல்..!!

-MMH 

     இப்போதெல்லாம் நாம் பாலிஷ் செய்யப்பட்டுள்ள அரிசியை தான் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அப்படி கிடையாது. அவர்கள் பாரம்பரியமாக கைக்குத்தல் அரிசியை தான் சமைத்து சாப்பிட்டு வந்தனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. இதில் வேதனை தரக்கூடிய விஷயம் என்னவென்றால் இன்று நம்மிடம் வெறும் 200 வகைகள் மட்டுமே உள்ளன. இந்த அரிசியைப் பற்றிய நன்மைகள் நமக்கு தெரிந்தால் தான் மீதம் இருக்கும் அரிசி வகைகளையாவது நாம் பாதுகாக்க முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பாரம்பரிய அரிசி மாப்பிள்ளை சம்பா. 

மாப்பிள்ளை சம்பா பெயர் காரணம்:- நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணம் இருந்துள்ளது. அது போல இந்த அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. புது மாப்பிள்ளையாக வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைக்கு இந்த அரிசி மிகவும் தேவை. அந்த காலத்தில் ஒரு பெண்ணை மணமுடிக்க இருக்கும் ஆணின் பலத்தை சோதிக்க ஒரு இளவட்ட கல்லை தூக்க சொல்வார்கள். அந்த கல்லை அசால்ட்டாக தூக்கும் பலத்தை தருகிறது மாப்பிள்ளை சம்பா அரிசி.

இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியைப் போலவே அதன் நீராகாரம் கூட பலம் வாய்ந்தது என பெரியவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நன்மை தரும் மாப்பிள்ளை சம்பா அரிசி தற்போது மீண்டும் புழக்கத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் இள வயது ஆண்களுக்கு இந்த அரிசி மிகவும் பயனுள்ளது. அப்படி இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அப்படி என்ன தான் உள்ளது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் சத்துக்கள்:- இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு அரிசி என்றால் அது மாப்பிள்ளை சம்பா தான். இந்த அரிசி சிவப்பு நிறத்தில் காணப்படும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் சத்துக்கள் ஆகியவை அடங்கி உள்ளது. உடலுக்கு பலம் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் அத்தனை சத்துக்களும் இதில் உள்ளது. இது தவிர வேறு சில நன்மைகளும் இந்த அரிசியில் உள்ளது .அவற்றை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்: ஆண்மை பெருகும்:- இந்த நவீன உலகில் பல ஆண்கள் ஆண்மை குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. ஆண்மைக் குறைவு இருப்பதாக உணரும் ஆண்கள் அடிக்கடி மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட்டு வர விரைவில் அந்த பிரச்சினை சரியாகும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த:- கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஆனால் இதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி ஒரு விதிவிலக்கு. ஏனெனில் இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து நரம்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆகவே இந்த சிவப்பு நிற அரிசியை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

உடல் பலம் பெற:- தினமும் மாப்பிள்ளை சம்பா அரிசியினால் ஆன உணவை சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு அடிக்கடி ஏதாவது ஒரு உடல்நலக் குறைவு ஏற்படும். இதற்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தியே காரணம். இவர்களுக்கு ஏற்ற அரிசி இது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. அதோடு இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்கிறது.

-ஸ்டார் வெங்கட்.

Comments