கோடையில் டிரக்கிங் செல்லத்தடை! தமிழக வனத்துறை உத்தரவு!!

     -MMH
     சேலம், பிப்.18: கோடை காலத்தையொட்டி, வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு (டிரக்கிங் செல்ல) தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரக்கிங்) உள்ளன. ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத் தீயில் சிக்கினர். இதில், 20க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால், கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்தது. தற்போது, மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிகிறது. இதனால், மலைப்பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த பகுதிகளில் மலையேற்றத்திற்கு தடை விதிப்பதாக மாவட்ட வன அலுவலர் முருகன் அறிவித்துள்ளார். இதனால், கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதியில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

-சோலை. ஜெய்க்குமார், சேலம். 

Comments