சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் மஞ்சுவிரட்டு! சீறிப்பாய்ந்த காளைகள்!!

     -MMH

      சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டி மதுராபுரியில் ஆண்டுதோறும் உச்சிகருப்பன் சாமிக்கு தை மாதம் படையல் போட்டு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். 

அதனைத் தொடர்ந்து தொட்டிய காத்தன் வயலில் நேற்று தை படையலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழையால் இப்பகுதியில் விவசாயம் செழித்தது. வயல்வெளிகளில் நெல் கதிர்கள் அறுவடை ஆகாமல் இருந்த காரணத்தால் இந்த வருடம் தை படையலை மாசி படையலாக மாற்றி விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக உச்சி கருப்பர் சாமிக்கு மாசிமாத படையலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் இருந்தும் வயல்வெளிகளிலும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.


சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 500 மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆர்வமுடன் இளைஞர்கள் காளைகளை அடக்கினர். பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர். இதில் பெரும்பாலான காளைகள், வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி ஓடின. இந்த மஞ்சுவிரட்டின் போது 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் வினோத் குமார் (வயது 26), நவீன்(18), கணபதி (66) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments