ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்கு! ஒரு குழந்தை பலியான பரிதாபம்!

-MMH

     ஞ்சையில் இரட்டை பெண் குழந்தைகளை வீடு புகுந்து குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே பெயிண்டராக வேலை செய்து வரும் ராஜா என்பவர் மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரண்டு குழந்தைகளையும் புவனேஸ்வரி தூங்க வைத்துவிட்டு, சிறிது வேலையாக வெளியே சென்றிருந்தார். அப்போது ஓட்டைப் பிரித்து, வீட்டினுள் இறங்கி வந்த குரங்கு ஒன்று ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்று சுவற்றின் மீது வைத்துச் சென்றது.  பின்னர் மற்றொரு குழந்தையும் தூக்கிச் சென்றபோது தாய் புவனேஸ்வரி பார்த்து சத்தமிட அங்கிருந்து ஒரு குழந்தையுடன் குரங்கு தப்பியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுவரின் மீதிருந்த குழந்தையை மீட்டனர்.

இந்நிலையில் காணாமல் போன மற்றொரு பெண் குழந்தையை உறவினர்கள் தேடி வந்த நிலையில், குழந்தையானது குளத்தில் விழுந்து பலியானது தெரியவந்தது. இதனையடுத்து குளத்தில் விழுந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை கொண்டு சென்றனர்,

குழந்தையைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை உடனடியாகப் பிடித்து, வனத்துறையினர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments