கோவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியிள் மதுரை,கள்ளக்குறிச்சி முதல் இடம்!!

-MMH

     கோவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் மதுரை மற்றும் கள்ளக்குறிச்சி அணிகள் முதல் இடம் பிடித்தன. கோவையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஆலயம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது விளையாட்டுப் போட்டிகள் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன.

தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கிலும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி நீச்சல் குளத்திலும் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1200 மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்‌.

போட்டியின் கடைசி நாளான இன்று நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களுடன் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக மதுரை அணி 228 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சென்னை அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், கோவை அணி 95 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்தன. நீச்சல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாகக் கள்ளக்குறிச்சி அணி 179 புள்ளிகளுடன் முதலிடத்தையும் புதுக்கோட்டை அணி 57 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் தேனி அணி 36 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்குச் சான்றுகளுடன் கோப்பைகளை வழங்கிய தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 24,25,26 ஆகிய தேதிகளில் தடகள விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளது எனவும், வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் சார்பில் குறைந்தது 50 மாற்றுத்திறனாளி வீரர்களை பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி வீரர்களின் உடமைகளை பாதுகாக்க ஒரு அறை தேவையென அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் உடனடியாக அறை வழங்கியதாகத் தெரிவித்த அவர், கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் தேவை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தபோது, முதலமைச்சரிடம் கூறி கோவையில் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நாளையவரலாறு  செய்திக்காக, 

-ஹனீப் தொண்டாமுத்தூர்.

Comments