கோவை அருகே குளத்தில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு...!!

-MMH

     கோவை அருகே குளத்தில், ஏழு சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, பேரூர் பெரியகுளக்கரை ரோட்டில், நேற்று காலை நடை பயிற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மூன்று சுவாமி சிலைகள் கிடப்பதை பார்த்தனர். பின், பேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், ஒரு அடி ஆழத்தில், ஏழு சிலைகள் இருப்பது தெரியவந்தது. பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 

மீன் பிடிப்போரின் உதவியுடன், உலோகத்தாலான, 2 அடி மகாலட்சுமி; 2.25 அடி விஷ்ணு துர்கை; 1.75 அடி கருமாரியம்மன் மற்றும் சிறிய அளவிலான சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் சிலைகளுடன், 3 அடி கருமாரியம்மன் கருங்கல் சிலையும் மீட்கப்பட்டது. அனைத்து சிலைகளும் பேரூர் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.ஐம்பொன் சிலைகள்?பேரூரை சேர்ந்த உலோக சிலை வடிவமைப்பாளர் ஒருவரை வரவழைத்த வருவாய்த்துறை,

அதிகாரிகள் சிலைகள் குறித்து கேட்டனர். அவர், 'உலோக சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை' என, தெரிவித்துள்ளார். இருப்பினும், பேரூர் துணை தாசில்தார் சத்தியன், 'தொல்பொருள் ஆய்வாளர்கள் சோதனைக்கு பின்னரே, முழு தகவலும் தெரியவரும்' என்றார்.இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் நேரில் விசாரித்தார். கடத்தப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய முடியாததால், குளத்தில் போடப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடக்கிறது.

 -கிரி ஈஷா.

Comments