எச்சரிக்கை! காதலர் தினத்தையொட்டி அதிகரிக்கும் இணைய மோசடிகள்!!


   -MMH

காதலர் தினம் நெருங்கும் இந்த சமயத்தில் ஃபிஷிங் மோசடிகள் எனும் இணைய மோசடிகள் அதிகரித்துள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபிஷிங் மோசடி என்பது இணையத்தில் போலி மின்னஞ்சல் செய்தி மூலமாக உங்களது வங்கிக்கணக்கு விவரங்களை திருடுவது. 

மின்னஞ்சலில் ஏதாவது சலுகைகளை அளித்து அதில் ஒரு லிங்கை அழுத்தக் கேட்கும். அதனை கிளிக் செய்யும்பட்சத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும். நீங்கள் தகவல்களை கொடுக்காவிட்டாலும் நீங்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்யும்போது உங்களுடைய ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டு உங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிபோக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், காதலர் தினம் நெருங்கும் இந்த சமயத்தில் ஃபிஷிங் மோசடிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இணைய மோசடி செய்யும் மின்னஞ்சல்கள் அதிகமாக இளைஞர்களை, காதலர்களை குறிவைத்து அனுப்பப்படுகிறது என்றும் எனவே, தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இணைய மோசடியில் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக மின்னஞ்சல் உள்ளது என்றும் செக் பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் காதலர் தினத்தோடு தொடர்புடைய புதிதாக உருவாக்கப்பட்ட 23,000 தளங்களில் 0.55% (115) தீங்கானது என்றும் 1.85% (414) சந்தேகத்திற்குரியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, மின்னஞ்சலில் வரும் தேவையற்ற கவர்ச்சிகரான விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments