ஆண்டிபட்டியில் கூலி உயர்வு கோரி நெசவாளர்கள் சாலை மறியல்!!

 

-MMH

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூலி உயா்வு கோரி, நெசவாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள், 200-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள், கூலி உயா்வு கோரி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது சம்பந்தமாக, நெசவாளா்கள், விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா் நல வாரியத்தினா் என முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டு தோல்வியடைந்தது. அதைத் தொடா்ந்து, நெசவாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி-டி.சுப்புலாபுரம் சாலையில் நெசவாளா்கள் மற்றும் தொழிற் சங்கத்தினா் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆண்டிபட்டி போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா். இருப்பினும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் தொடா் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் நெசவாளா்கள் அறிவித்துள்ளனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக் தேனி. 

Comments