இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு அரசியல்வாதி! இலவச வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ!!

     -MMH
     உள்ளாட்சி நிர்வாகங்களில் கவுன்சிலராக ஒருமுறை பணியாற்றினாலே நான்கைந்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்துவிடுவது தற்போதைய அரசியல் களத்தின் நிலை. இந்தநிலையில், சிறு வயது முதல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக மக்களால் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட என்.நன்மாறன், இலவச வீடு கேட்டு மனு அளித்தது அனைவரையும் அதிரவைத்திருக்கிறது.

பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர் எப்படி எளிமையாக இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்று நம்முன் வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நன்மாறன் முக்கியமானவர்.

சிறு வயதில் தொழிற்சங்கவாதியாகப் பணியாற்றி, அதன் நீட்சியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகியாகப் பணியாற்றிவர். கலை, இலக்கியப் பிரிவான த.மு.எ.க.ச-வில் பணியாற்றியவர். பல நூல்களையும் எழுதியிருக்கிறார். நகைச்சுவை கலந்த அவருடைய எளிமையான மேடைப்பேச்சால் `மேடைக் கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவர்.

இரண்டு முறை மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, தற்போது எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கினாலும், அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் அலவன்ஸ் மூலம் வாழ்ந்துவருகிறார்.

பிள்ளைகள் தனித்தனியாக வசித்துவரும் நிலையில், மதுரை மேலப்பொன்னகரத்தில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் அவர், வாடகை கட்டுப்படியாகததால் அரசு வழங்கும் இலவச வீட்டுக்கு மனு அளிக்க இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் மனு அளிப்பது, அவர்களின் போராட்டங்களில் கலந்துகொள்வது என்று தன் உடல்நலத்தையும் பாராமல் இயங்கிவருபவர் நன்மாறன். இன்று தனக்காக இலவச வீடு கேட்டு வந்தது கலெக்டர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பாகவும், நெகிழ்வாகவும் பார்க்கப்பட்டது.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய நன்மாறன், ``குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜாக்கூரில் ஏழைகளுக்கு அரசு வழங்கும் வீடு ஒன்றைத் தனக்கு ஒதுக்கப் பரிசீலிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன். அவர் இல்லை. அதனால் டி.ஆர்.ஓ-விடம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். என் மனுவுக்கு நம்பர் போட்டுத் தந்திருக்கிறார்கள்" என்றார் வெள்ளந்தியாக.

அவர் இயல்பாக தன் கோரிக்கை பற்றிச் சொன்னது செய்தியாளர்களையும் கலங்கவைத்தது.

இன்றைய அரசியல்வாதிகளில் இப்படியும் ஒருவர்!

- பாரூக், சிவகங்கை.

Comments