திரையில் ஹீரோ! தரையில் திருடன்!! தேவகோட்டையில் செயின் பறிப்பில் கைதான, சினிமா கதாநாயகன்!

     -MMH

     'தேவகோட்டை காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சீனிவாசன். இவர், மூதாட்டியின் முகத்தில் ஸ்பிரே அடித்து, 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றதாக காரைக்குடி காவல்துறை தற்போது கைது செய்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த நாச்சுழியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி குழந்தையம்மாள். இவர் கடந்த 14-ம் தேதி காலை 6.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில், முககவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், குழந்தையம்மாள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து, அவரை நிலை குலையச் செய்து, சுமார் 5 பவுன் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து குழந்தையம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, காரைக்குடி டி.எஸ்.பி. அருண் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. க்கள் பார்த்திபன், தவமணி, காவலர்கள் சுரேஷ், தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடி வந்தனர்.

ஹீரோவாக நடித்த சீனு!

மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள் குறித்த துப்பு கிடைத்தது. விசாரணையில், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் செயின் பறிப்பு குற்றவாளிகள் தங்கியிருந்தை தனிப்படை போலீஸ் உறுதி செய்தது.

அதனையடுத்து, குற்றவாளிகளில் ஒருவரான சீனுவாசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், மற்றொரு குற்றவாளி குறித்து தகவலும் கிடைத்து, அவனை இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், செயின் பறிப்பு குற்றவாளி சீனு என்ற சீனிவாசன், ‘தேவகோட்டை காதல்’ என்ற திரைப்படத்தில், சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகன் என்றும் தெரியவந்தது. திரையில் ஹீரோவாகவும் தரையில் திருடனாகவும் இருந்த சீனு, தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments