பாஷ்யம் மெட்ரோ! கோயம்பேடு மெட்ரோவுக்கு தங்கள் நிறுவனப் பெயர் சூட்டிய விளம்பரதாரர்!! அதிர்ச்சியில் பயணிகள்!

     -MMH

மூன்று கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்ட தனியார் நிறுவனம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தங்களது பெயரை சூட்டிக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மெட்ரோ ரயில் நிலையத்தில் விளம்பர ஒப்பந்தங்கள் ஆண்டுதோறும் போடப்படுகிறது. அதன்படி 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு பலவிதங்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நிலையத்திற்கு  பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மெட்ரோவிற்கு புதிய பெயர் சூட்டியுள்ளனரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளிப்புறப் பகுதிகளில் விளம்பரம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோ ரயில் நிலையத்தின் வருவாயைப்  பெருக்குவதற்கு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விளம்பரம் கொடுப்பது வழக்கம் என்றும், அந்த வகையில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் என்ற வீதத்தில் 3 ஆண்டுகள் டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

டெண்டர் அடிப்படையில் ஒரு நிறுவனம் தனது பெயரில் மட்டுமே விளம்பரம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது ஆனால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கே தங்கள் நிறுவனத்தின் பெயரை சூடடியது போல் விளம்பரம் செய்தது ஏன் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மெட்ரோ நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் கிடைக்கவில்லை என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற விளம்பரங்களை அனுமதிக்க முடியாது எனப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ நிர்வாகத்தையும் மீறி ஒரு ரயில் நிலையத்திற்கே விளம்பர நிறுவனம் தங்கள் பெயரை எப்படி சூட்ட முடியும் என்பது பயணிகளுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. 

-Ln. இந்திராதேவி முருகேசன், ஜெய்க்குமார்.

Comments