தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்? முடுக்கி விடப்படும் விழிப்புணர்வு!

-MMH

      சேலம், பிப்.16: சேலத்தில் முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டு கொள்ள, தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி முதல் காவலர்கள், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறைகளை சேர்ந்த முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலத்தில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. ஒரு மாதம் நெருங்கிய நிலையில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் குறைவான முன்களப்பணியாளர்களே தடுப்பூசி போட்டு கொண்டனர். முன்களப்பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. தயக்கத்தில் உள்ளதால் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ஆர்வம் இல்லததால் தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 26 ஆயிரம் முன்களப்பணியாளர்களுக்கு 2 தவணைகளில் தடுப்பூசிகள் போடுவதற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. தயக்கம் காரணமாக வருவாய், காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு 2ம் கட்டமாக தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை ஏப்ரல் மாதத்திற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் தடுப்பூசிகள் காலாவதியாகி வீணாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில காரணங்களால் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 2வது டோஸ் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். சுகாதார பணியாளர்கள் வரும் 22ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்களபணியார்கள், காவலர்கள், வருவாய் துறையினரை தொடர்ந்து, அரசு அனுமதி அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்'' என்றனர்.

-சோலை.ஜெய்க்குமார், சேலம்.

Comments