இலவு காத்த கிளியான மதுரை மக்கள்! எய்ம்ஸ் மருத்துவமனை வருமா, வராதா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை 12 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்று, தென்மாவட்டத்திற்கென மதுரையை மையமாகக் கொண்டு ‘எய்ம்ஸ் மருத்துவமனை’ அமைக்கவேண்டும் என்பதே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மோகன் மதுரை எம்.பியாக இருந்த காலகட்டத்தில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவர பல முயற்சிகளை எடுத்தார். இதற்காக குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையே நேரில் சென்று சந்தித்தார். ஆனால் மத்திய அரசு அப்போது எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதேபோல தற்போது அமைச்சராக இருக்கும் ஆர்.பி.உதயகுமாரும், மதுரைக்கு நிச்சயம் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுத்தே தேர்தலில் வெற்றிபெற்றார். அவரும் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டுவருவதற்கு கடும் முயற்சிகளை எடுத்தார். அதோடு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்தன.
இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தின் ஐந்து இடங்களை மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். அப்போது தஞ்சாவூர் அருகிலுள்ள செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுசெல்லும் முயற்சிகளும் சிலரால் நடைபெற்றன. ஆனால் தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கும் மதுரை வருவது எளிது, அதோடு தென்மாவட்ட மக்களும் மதுரையை அணுக எளிதாக இருக்கும் என்பதால் மதுரையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இறுதிசெய்யப்பட்டது.
ஒருவழியாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 27-ம் தேதி மதுரை எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின் சில மாதங்களிலேயே, ஜப்பானின் கடனுதவியுடன் மதுரை எய்ம்ஸ் அமைக்கப்படும் என கூறப்பட்டது. அதோடு முதல் கட்டமாக சுற்றுச்சுவர் கட்ட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என ஆர்.டி.ஐ. மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது.
ஆனால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியே மிகவும் மெதுவாகத்தான் நடந்தது. அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகள் கழித்தும் இப்போதுதான், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியே 90℅ முடிந்துள்ளது. ஜப்பான் நிறுவனம் நிதியுதவி அளிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பிறகு அந்தக் கதை என்ன ஆனது? என்றே தெரியாததால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? என சந்தேகம் மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது.
இதனிடையே 2018-ம் ஆண்டில் ₹.1,264 கோடியாக இருந்த எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு, கடந்த 2020 இல் ₹.2,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரை எய்ம்ஸ்க்கு பின்னர் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள தகவல் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானிடம் நிதி உதவி கேட்டுள்ள மத்திய அரசின் செயல்பாட்டுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநிலங்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது ஏன்? என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மதுரை எய்ம்ஸ் அமைப்பதற்கு இதுவரை 12 கோடி செலவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இதனை மையமாக வைத்து, “ஏது..! எய்ம்ஸ்ல நட்டு வச்சுருக்க நாலு செங்கலுக்கு செலவு 12 கோடியா?” எனவும், “அப்பல்லோ இட்லிய விட எய்ம்ஸ் செங்கலின் விலை அதிகமாக இருக்கிறதே!” எனவும் சமூகவலைத்தளங்களில் பலர் கலாய்த்து வருகின்றனர். இறுதியாக எய்ம்ஸ் விசயத்தில் இலவு காத்த கிளியின் கதையை போல ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் நிலை!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments