ரவுடி தலை துண்டித்து கொலை! குற்றவாளிகளைப் பிடிக்க நடத்திய என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக் கொலை!

     -MMH

     கடலூரில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் கிருஷ்ணா என்பவரை கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையினரை தாக்கியதால் என்கவுண்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் வீரா என்கிற வீராங்கையன் வயது 30. பிரபல ரவுடியான இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவர் வீரா கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே சென்றபோது, அவரைப்  பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டியது.

அத்துடன், ஆத்திரம் தீராததால் அந்த கும்பல், வீராவின் தலையை துண்டித்து எடுத்துக்கொண்டு, உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றனர்.

வீராவின் தலைதுண்டிக்கப்பட்ட உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே, தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான வீரா உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீராவை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவந்த நிலையில்,  அருண், சுதாகர், கமலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, கிருஷ்ணா என்பவரை பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற கிருஷ்ணாவை காவல்துறையினர் என்கவுண்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர்.

-சோலை. ஜெய்க்குமார், சேலம்.

Comments