வீடற்ற ஏழை குழந்தைகளுக்கு இலவச டியூசன் - அசத்தும் இளைஞர்!

-MMH

     இதுகுறித்து மாணவி மாளவிகா கூறுகையில், எங்கள் வீட்டில் ஆன்லைனில் படிக்க மொபைல் வசதி இல்லை. சாலமன் அண்ணா டியூசன் எடுப்பது மிகவும் உதவியாக இருக்கிறது என்று தெரிவித்தார். சென்னை பிரேசர் பிரிட்ஜ் சாலையில் பாதையோரம் வசிக்கும் சாலமன், வீடற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார். 

சென்னை பிரேசர் பிரிட்ஜ் பகுதியில் சாலையோரம் வசிப்பவர் சாலமன். இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அங்கு தான் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இவரது பெற்றோர் கூலித்தொழிலாளி. 22 வயதான இந்த இளைஞர், தன் ஏழ்மையுடன் போராடி படித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தன் அன்றாட அலுவலக வேலைகளை கடந்து, சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கிறார். சிங்கர்ஸ் சாலை, ரட்டன் பஜார் என இரண்டு இடங்களில் சாலையோரம் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு தினமும் இரண்டு மணி நேரம் பாடம் எடுக்கிறார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் கற்பித்து கொடுத்தும் இவரிடம், சுமார் 40 மாணவர்கள் பயில்கிறார்கள். இம்மாணவர்கள் அனைவரும் மாநகராட்சி பள்ளியில் பயிலக்கூடியவர்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்ய தொடங்கியதாக தெரிவிக்கிறார் சாலமன்.

இதுகுறித்து சாலமன் கூறுகையில்:-  ஏழை மாணவர்களுக்கான வெளிச்சம் கல்வி மட்டுமே. கல்வி மட்டுமே அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். என் பெற்றோர் கூலிவேலை செய்து படிக்க வைத்தனர். என்னை போல் ஏராளமான சாலையோரம் வசிக்கக்கூடிய குழந்தைகள் உள்ளனர். சாலையோரம் வசிக்கக்கூடிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், பெற்றோரின் வேலைக்கு உதவக்கூடியவர்கள். பள்ளிக்கூடம் இல்லாத நிலையில், மாணவர்கள் முழுநேரமாக பெற்றோரின் வேலைக்கு சென்றுவிட்டால், கல்வி இடைநின்ற்றலுக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் பயிலவும் மொபைல் போன் உள்ளிட்ட வசதியும் இல்லாத இம்மாணவர்கள், கல்வியில் ஆர்வம் இழந்து விடக்கூடாது என்பதற்காவும், கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காவும் டியூசன் எடுக்கத்தொடங்கினேன், என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments