கொழுந்தியாவை திருமணம் செய்து தருவதாகக் கூறி .1.27 கோடி மோசடி! குடும்பத்தோடு கைது!

 

-MMH

வேடசந்துார் அருகே கொழுந்தியாவை திருமணம் செய்து வைப்பதாகக்கூறி பைனான்சியரிடம் ₹.1.27 கோடி, 45 பவுன் நகையை மோசடி செய்த குடும்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே முத்துபழநியூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 29. வடமாநிலங்களில் பைனான்ஸ் செய்து வருகிறார். இதில் கிடைத்த பணத்தை சேமிக்க அதேபகுதியைச் சேர்ந்த நண்பர் அறிவழகனிடம் யோசனை கேட்டுள்ளார். அவர், 'வருமான வரி பிரச்னையை தவிர்க்க அறிவழகன், அவரது மனைவி கலைச்செல்வி, மற்றொரு நண்பர் முருகன் பெயரில் தலா ஒன்றும், பாலசுப்பிரமணியன் பெயரில் 2 என 5 வங்கிக் கணக்குகள் துவங்க ஆலோசனை கூறி, அதன்படி 2014ம் ஆண்டு கணக்குகள் துவக்கப்பட்டன.

அந்த கணக்குகளின் ஏ.டி.எம் கார்டுகள், பண பரிவர்த்தனையை அறிவழகனே கவனித்துக் கொண்டார். மேலும் நண்பர் முருகன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியாக பைனான்ஸ் செய்து வந்துள்ளார். பாலசுப்பிரமணியன் திருமணத்திற்காக பெண் பார்த்த போது அறிவழகன் தனது மனைவி கலைச்செல்வியின் தங்கை முத்துலட்சுமியை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு முத்துலட்சுமியும் சம்மதித்தார்.

ஆறுமாதங்களை கடந்த நிலையில், திருமணத்திற்காக 45 பவுன் நகை வாங்க வேண்டும் என முத்துலட்சுமி மூலம் கேட்டுப் பெற்றுள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு முத்துலட்சுமியின் அலைபேசியில் இருந்து பாலசுப்பிரமணியனுக்கு பேசிய கலைச்செல்வி, 'தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார். வேறு பெண் பார்த்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார். இதனால், தான் அனுப்பிய ₹.1.27 கோடி பணம், 45 பவுன் நகையை திருப்பித் தரும்படி பாலசுப்ரமணி கேட்டுள்ளார்.

அதற்கு அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். பாலசுப்பிரமணி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்யா உட்பட போலீசார் விசாரித்து அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி, அரிச்சந்திரன், கண்ணன் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அறிவழகன் (35), கலைச்செல்வி (30),  முத்துலட்சுமி (25) ஆகியோரைக் கைது செய்தனர்.

-மூன்றாம் கண்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments