சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் .ரூ1500 கோடி அபேஸ்! 10 லட்சம் பேரிடம் பணத்தைச் சுருட்டிய MLM கும்பல்!

 

-MMH

                  சுமார் 10 லட்சம் பேரிடம் 1500 கோடி ரூபாய் சுருட்டிய 24 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் ₹.1,500 கோடி பண மோசடி வழக்கில், மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 24 பேரை ஹைதராபாத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் 'இன்டஸ் வைவ்வா ஹெல்த் சயின்ஸ்' என்ற பெயரில் இயங்கும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிறுவனத்தில் ₹.12,500 கொடுத்து உறுப்பினராக சேருவோர், நிறுவனத்தின் தயாரிப்புகளை பல்வேறு சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். அதே போல, மற்றொரு நபரை நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டால், கூடுதலாக ஆயிரம் ரூபாய் போனஸாக கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளைத் தேன் போன்ற மொழியில் மக்களிடம் வாரி இறைத்துள்ளனர்.

இதை நம்பிய பலரும், பணத்தை முதலீடு செய்து ஏமாந்து வந்துள்ளனர். சிறிய தொகை என்பதால், காவல் துறையிடம் சிக்காமலிருந்த மார்க்கெட்டிங் கும்பல், ஒரு ஹைதராபாத்வாசியின் புகாரில் வசமாகச் சிக்கிக்கொண்டது.

தெலங்கானாவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் இந்த கும்பலின் வலையில் சிக்கியுள்ளனர். ஒருவரிடம் குறைந்தபட்சம் ₹.12,000 வாங்கியுள்ளனர். சுமார் 10 லட்சம் பேரிடம், ₹.1,500 கோடி சுருட்டப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 24 பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களிடம் எம்எல்எம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த மோசடி தொடர்ந்த வண்ணமே உள்ளது.

-பாரூக்.

Comments