கோவையில் தினமும் 3 முதல் 5 குடும்பத்தினர் கொரோனாவால் பாதிப்பு! காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்!

-MMH

                       கோவையில் தினமும் 3 முதல் 5 குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டாலும் அதன் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அதில் தினமும் 3 முதல் 5 குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் வரை இருப்பதால் தினமும் மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் இது 50 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

முன்பு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தபோது ஒரு குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் தற்போது குடும்பம் குடும்பமாக கொரோனாவால் பாதிக்கும் நிலைமை உருவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தினமும் 50-க்கும் குறைவானவர்கள் தான் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் அவர்களில் 3 முதல் 5 குடும்பத்தினர் உள்ளனர். மற்றவர்கள் தனிப்பட்ட நபர்களாக இருந்தாலும் கூட அவர்களின் குடும்பத்தினரை மறுநாள் பரிசோதனை செய்தால் தான் அவர்களுக்கும் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். இதே நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகத் தான் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கை கழுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர், மதுக்கரை ஊராட்சி ஒன்றியங்களில்தான் தொற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது கோவை மாவட்டத்தில் தினமும் பாதிப்பு 40 முதல் 50 வரை உள்ளது. ஆனால் அதற்கு கீழ் குறையவில்லை. இதற்கு காரணம் கோவை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான். "இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,127 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினார்கள். 353 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments