திருப்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது 3 சாமி சிலைகள் பறிமுதல்!

    -MMH

 திருப்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது 3 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகன சோதனை:

சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில்  8 சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான மண்ணரை குளத்துப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சதீஸ்குமார், சையது யூசுப் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக  பெங்களூரு பதிவு எண்ணை கொண்ட ஒரு கார் வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் சாமி சிலைகள் இருந்தன. இது குறித்து பறக்கும் படையினர் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில்  அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் சாமி சிலைகளையும், காரையும் பறிமுதல் செய்து, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.

வெண்கல சிலைகள்:

இதன் பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில் காரில் வந்த 2 பேரும் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்தது பெங்களூரு ஜலகள்ளி பகுதியை சேர்ந்த சையத் ரசூல் அகமது (வயது 39), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருக்கைகள் விற்பனை செய்து வருகிறார்கள். திருப்பூருக்கு வந்த ஆர்டரின் படி இருக்கை ஒன்றை ஒருவருக்கு கொடுக்க வந்துள்ளனர்.

ஏற்கனவே இந்த சாமி சிலைகளை பெங்களூருவில் சையத் ரசூல் அகமது வாங்கி தனது காரில் வைத்துள்ளதாகவும், இந்த சிலைகளுக்கு பாலீஸ் போடுவதற்கு திருப்பூருக்கு கொண்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். காரில் வெண்கலத்திலான கண்ணன், ராதை, சிவன் சிலை மற்றும் பீடம், மணி, 2 அலங்கார வளைவுகள் என 60 கிலோ எடை இருந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- கிரி தலைமை நிருபர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments