5 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவன் சாதனை.!!
உலக ஐக்கிய சிலம்ப விளையாட்டுக் கழகம் சாா்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி மற்றும் சிலம்ப ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் ஒரு கையால் ஒற்றைக் கம்பு சுற்றுதல் மற்றும் சுருள் வாள் சுழற்றுதல் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 180 ஆண், பெண் வீரா்கள் போட்டியில் கலந்து கொண்டனா்.
ஒற்றை கம்பு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் சுற்ற வேண்டும், சுருள்வாள் குறைந்த பட்சம் 5 நிமிடம் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை சுழற்றவேண்டும்.
போட்டியில் தேனி மாவட்டம் சாா்பில் கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் வி.பி.எம். பிரிதிவிராஜன் வலது கையால் தொடா்ந்து 5 மணி நேரம் ஒற்றை கம்பு சுற்றினாா். மேலும் ஒரு மணி நேரம் சுருள் வாள் சுழற்றியும் சாதனை படைத்தாா்.
இவா் கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். பிரிதிவிராஜனுக்கு, உலக ஐக்கிய சிலம்ப அமைப்பு தலைவா் எஸ்.சாந்தா, செயலாளா் எம்.வள்ளி ஆகியோா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியா் அவருக்குப் பாராட்டு தெரிவித்தனா். குந்தவை சிலம்ப கலைக்கூட பயிற்சியாளா்கள் புவனேஸ்வரி, ஹரிஹர நாதன் ஆகியோரும் மாணவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தனா்
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக், தேனி.
Comments