இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம்: உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர்தின நல்வாழ்த்து!

     -MMH
    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை உலகில் உள்ள அனைத்து பெண்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம் ஒரு மாபெரும் போராட்டத்திற்கான வெற்றி என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. 

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் ஆகிய முக்கிய தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் முதன்முதலாக உரிமைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். பாரிஸ் நகரத் தெருக்களில் பெண்கள் பலரும் அணிகளாகத் திரண்டனர்.

கோபத்தில் கொதித்தெழுந்த பெண்களை அதிகாரம் கொண்டு அடக்கி, போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் கைது செய்வேன் என்று அறிவிப்பு விடுத்தார் அந்நாட்டு அரசர். ஆயிரக்கணக்கில் கூடிய பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் வீதிகளில் திரண்டு வரத் தொடங்கினர். பெண்களுடன் கைக் கோத்து அவர்களின் கோரிக்கைகளுக்காக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வேன் என்று மிரட்டிய இரண்டு காப்பாளர்களை கொந்தளிப்பில் தாக்கியே கொன்றனர் போராட்டக்காரர்கள். இந்த நிகழ்வால் அதிர்ந்துப்போன அரசர், பெண்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கிறேன் என்றார். பின்னர் அது இயலாது போனதால், அரசர் முடித்துறந்தார்.

காட்டுத்தீப் போல இந்த செய்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியது. பிரான்ஸ் நாட்டு புரட்சி பெண்களுக்கு முன்னோட்டமாக அமைந்தது. அந்நாட்டுப் பெண்களும் தங்களின் உரிமைகளுக்காக போராட்டத்தில் குதித்தனர். கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ஆளும் வர்க்கம் சற்ரு நடுங்கியது.

இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இத்தாலி நாட்டுப் பெண்கள், தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.  அந்த நாள் தான் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்.

உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, மகளிர் தினமாக அமைய அடிப்படைக்  காரணமாக இருந்தது. பின்னர்,  ஒரு மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின், போராட்டம் வெற்றிப்பெற்ற நாளான மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை வரவேற்றனர். பின்னர் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

பெண்கள் கையில் எடுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இறுதியாக கிடைத்த வெற்றியையே உலக மகளிர் தினமாக மார்ச் 8ம் தேதி கொண்டாடுகிறோம். 

மீண்டும் ஒருமுறை இனிய மகளிர்தின நல்வாழ்த்துடன் விடை பெறுவது,

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments