சிங்கம்புணரி மக்களை கொரோனாவிலிருந்து காக்க முனையும் சுகாதாரத்துறை! மக்கள் ஒத்துழைப்பார்களா?

 

-MMH

      சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் பல்வேறு பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது. 

சிங்கம்புணரி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பிரான்மலையில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா இரண்டாவது அலை துவங்கி உள்ளதாகக் கூறப்படும் நிலையில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்நிலையில், சிங்கம்புணரியில் பொதுமக்களை முகக்கவசங்கள் அணிய வலியுறுத்தியும், அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையமும் சிங்கம்புணரி பேரூராட்சியும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டன.

பிரான்மலை வட்டார மருத்துவர் நபீஷாபானு தலைமையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மரு.செந்தில்குமார், மரு.பரணிராஜன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மதிஅரசு, எழில்மாறன், சாத்தன், மோகன் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மங்கையற்கரசி ஆகியோரும் சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

-பாரூக், சிவகங்கை.

Comments