வைக்கோல் போருக்குள் சிக்கிய ஒரு கோடி ரூபாய்! அதிமுக எம்எல்ஏவின் பணமா?

     -MMH
     மணப்பாறையில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ம் தேதி இரவு திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் அதிமுக கொடி கட்டிய காரில் இருந்த சாக்கு மூட்டையில் ₹.1 கோடி ரொக்கத்தை தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் கைப்பற்றினர். பின்னர் காரில் இருந்த அதிமுக பிரமுகர்கள் ரவிச்சந்திரன் (55), சத்தியராஜா (43), ஜெயசீலன் (46), டிரைவர் சிவக்குமார் (36) ஆகியோரை திருவரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், முசிறி அதிமுக எம்எல்ஏ செல்வராசு மகன் ராமமூர்த்தி பெயரில் கார் இருந்ததும், பணப்பட்டுவாடாவுக்கு அதிமுக மூத்த எம்பி மூலம் திருச்சி மாவட்ட செயலாளர் கொடுத்து அனுப்பியதும், பறக்கும் படையினரிடம் சிக்கியதால் காரில் இருந்த மூட்டையை சாலையில் போட்டு விட்டு அதிமுக எம்எல்ஏ மகன் தப்பி சென்றதும் தெரியவந்தது.  

இந்தச் சம்பவத்தை தேர்தல் ஆணையத்திற்கு தாமதமாக தெரிவித்ததால் திருச்சி கலெக்டர் சிவராசு, மாவட்ட எஸ்.பி. ராஜன், சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை கடந்த 25ம்தேதி இரவு தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.

அந்த ₹.1 கோடி பணத்திற்கு யாரும் உரிமை கோராததால் திருச்சி வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இணை இயக்குனர் மதன்குமார் பெட்டவாய்த்தலை போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இன்னும் மர்ம முடிச்சு அவிழாத நிலையில், மணப்பாறை அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி ₹.1 கோடி பறிமுதல் செய்துள்ளனர். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக சந்திரசேகர் போட்டியிடுகிறார். இவர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல்வேறு இடங்களில் உள்ள அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநர்களாக வலசுபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, கோட்டைபட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

எம்எல்ஏ தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரராகத் தங்கப் பாண்டியன் என்பவர் உள்ளார். இவர்களது வீடுகளில் நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வீர கோவில்பட்டியில் உள்ள எம்எல்ஏவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரது கல்குவாரியிலும் நள்ளிரவில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வலசபட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டில், வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

அப்போது வீட்டிற்குள் சல்லடை போட்டு தேடியும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் பின்புறத்தில் இருந்த வைக்கோல் போரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த வைக்கோல் போரிலிருந்து 500 ரூபாய் கட்டுகளாக, சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைக்கோலிலிருந்து ஒரு கோடி ரூபாய் எடுக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் , அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம், பணம் ஏன் வைக்கோலில் மறைத்து வைக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- பாரூக்.

Comments