சிங்கம்புணரியில் தெருக்கள் முழுவதும் தேர்தல் கோலங்கள்!
சிங்கம்புணரி தாலுகா, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மலைக்குண்டு மலைப்பகுதியில் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதனையொட்டி சிங்கம்புணரி பகுதியில் நடந்த இந்தக் கோலப் போட்டிக்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையேற்றார். நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமான என் வாக்கு என் உரிமை, 100 சதவீத ஓட்டுப்பதிவு, என் ஓட்டு விலைக்கு அல்ல, சுதந்திரமாக வாக்களிப்போம், ஒரு விரல் புரட்சி, இந்த மை தேசத்தின் வலிமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்களை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண கோலங்களை போட்டு அசத்தினர்.
நிகழ்வுக்கு சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் மேகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கோலப் போட்டியை பார்வையிட்டு மதிப்பெண்கள் வழங்கினார். 5 நாட்கள் நடைபெறும் விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நிறைவில்,
எதிர்வரும் மகளிர் தினத்தன்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார். அணைக்கரைப்பட்டி ஊராட்சிச் செயலர் வடிவேலு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். தேர்தல் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அதிகாரி கதிரேசன், குடும்பத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments