சசிகலாவிடம் பேசியது என்ன? மனம்திறந்த ஹைதர் அலி!

-MMH

     தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமுமுக தலைவராக இருந்தவருமான ஹைதர் அலி நேற்று (மார்ச் 2) சென்னையில் சசிகலாவை சந்தித்திருக்கிறார். மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக ஆகியவற்றில் ஜவாஹிருல்லாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாங்கள்தான் தமுமுக என்று இரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது.

இந்தப் பின்னணியில் மனிதநேய மக்கள் கட்சி திமுக அணியில் இரண்டு தொகுதிகளுக்கு கையெழுத்திட்டுள்ள நிலையில் ஹைதர்அலி சசிகலாவை சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு இஸ்லாமிய அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு நாளைய வரலாறு சார்பாக ஹைதர் அலி அவர்களிடம் பேசினோம்.

அப்போது அவர், “மறைந்த எம்.நடராஜன் எனது நண்பர். அவரது மறைவின்போது திருமதி சசிகலா  அவர் சிறையிலிருந்து பரோலில் வந்து குறுகிய நாட்களிலேயே சிறைக்கு திரும்பி விட்டார். எனவே அப்போது அவரச் சந்தித்து என்னால் இரங்கல் தெரிவிக்க முடியவில்லை.

அதனால் என் நெருங்கிய நண்பரின் மறைவுக்கு அவரின் மனைவியிடம் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலையில் நான் சசிகலா அவர்களை இப்போது சந்தித்தேன். தற்போதைய அவரது உடல் நலத்தையும் விசாரித்தேன். நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்” என்று கூறிய ஹைதர் அலியிடம், 

சசிகலாவிடம் அரசியல் பேசினீர்களா? என்று கேட்டோம்.

“நிச்சயமாகப் பேசினேன். 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் நாடாளுமன்ற தேர்தலில் லேடியா, மோடியா என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்த முழக்கத்துக்கு தமிழ்நாட்டு மக்களும் மகத்தான ஆதரவளித்து அந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களை அதிமுகவுக்கு கொடுத்தார்கள். 1999லேயே எங்களது மாநாட்டில்தான் ஜெயலலிதா அவர்கள், ‘பாஜகவை நான்தான் ஆட்சிக்குக் கொண்டு வந்தேன். அந்தப் பாவத்துக்கு நானே அந்த ஆட்சியை கலைத்தேன். கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று பேசினார்கள்.

இந்த அடிப்படையில் உங்களிடம் நாங்கள் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். தமிழ்நாடு சமூக நீதியின் அடையாளமாக திகழ்கிறது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த நாடு. தங்களது கணவர் நடராஜன் அவர்களும் ஒரு பெரியாரிஸ்ட்தான். நீங்களும் அம்மாவின் வழி வந்தவர்தான்.

நீங்கள் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தபொழுது அந்தப் பதவிக்கு நீங்கள் வந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் சில சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி உங்களை சிறையில் அடைத்தார்கள். அதனால் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள், கோரிக்கை’ என்று கூறினேன். நான் கூறியதைக் கேட்டு தலையசைத்து ஏற்றுக்கொண்டார் சசிகலா” என்று தெரிவித்தார் ஹைதர் அலி.

இச்சந்திப்பில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் உஸ்மான்கான், தமுமுக மாநில துணை செயலாளர் முகமதுரபி, மத்திய சென்னை மாவட்ட தமுமுக தலைவர் துறைமுகம்மீரான், தென்சென்னை மாவட்ட தமுமுக தலைவர் பிஸ்மில்லாகான், தமுமுக மாநில தலைமைக் கழக பேச்சாளர் ஐஸ்ஹவுஸ் இலியாஸ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தென்சென்னைமீரான், தமுமுக வடசென்னை மாவட்ட பொருளாளர் இராயபுரம் நியமத், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் இச்சந்திப்பில் உடனிருந்தனர்.

-பாரூக்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments