இந்த மை தேசத்தின் வலி மை..!!

 

-MMH

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கடிதம் அனுப்பி  ஓட்டுப்போட வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் நுாதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியப்படுத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு கட்டமாக  பொள்ளாச்சி லோக்சபா தேர்தல், கடந்த முறை நடந்த சட்டசபை தொகுதி தேர்தல்களில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு வாக்காளர்களை 100 சதவீதம் ஓட்டு போட வைப்பதற்காக நுாதன பிரசாரத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கடிதம் வாயிலாக பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் குறைந்த ஓட்டு சதவீதம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து ஓட்டு போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி  அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய கடிதத்தை, வாக்காளர்கள் முகவரிக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.'இந்த 'மை' நமது தேசத்தின், வலி 'மை' போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன், தேர்தல் நாள் ஏப்., 6, என, அச்சடிக்கப்பட்டு கடிதம் அனுப்பப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் கூறியதாவது பொள்ளாச்சி பகுதியில் படித்த மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களும் இளைஞர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக முயற்சிகள் எடுக்கப்படுகிறது.அதன் ஒரு கட்டமாக, குறைந்த சதவீதம் ஓட்டுகள் பதிவான பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள வாக்காளர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. வீட்டுக்கே கடிதம் அனுப்புவதால், ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் விழிப்புணர்வோடு வந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments