மே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்கா!! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!!

  -MMH

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மே 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனையடுத்து, அரசு விடுமுறை நாளான மே 1 மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மே 2ல் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வருவோருக்கு மட்டும் விலக்கு அளிக்கவும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே அன்றைய நாட்களில் ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரைப்பதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

- ராயல் ஹமீது.

Comments