கொரோனா - 2ஆம் அலை! சந்தேகங்களும் விளக்கங்களும்! ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்!!

 

-MMH

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3000த்தைஎட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா இரண்டாம் அலை மற்றும் தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. மக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார், சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது விளக்கங்களும்:

கொரோனா எண்ணிக்கை மார்ச் மாதத் துவக்கத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறதே. இதற்கான காரணம் என்ன?கொரோனா குறித்த பயம் மக்களிடம் குறைந்ததே அதற்குக் காரணம். பயம் குறைந்ததால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா வழிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிப்பதில்லை. குறிப்பாக திருமணம் போன்ற விழாக்களில் மக்கள் கூட்டம்கூட்டமாக பங்கேற்கின்றனர். முன்பெல்லாம் பகுதிவாரியாக அதிகரித்துவந்த தொற்று, தற்போது குடும்பத்திற்குள்ளேயேதான் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. துக்கவீடுகளிலும் ஒருவரை ஒருவர் கட்டி அழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.

கொரோனா முதல் அலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவருக்கும், தற்போது இரண்டாம் அலையில் தொற்று உறுதிசெய்யப்படுபவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?போனமுறை இருந்ததைவிட வயிற்றுப்போக்கும், வாந்தியும் இந்தமுறை சற்று அதிகமாகவே இருக்கிறது. அதேபோல் சிடி ஸ்கேனில் தற்போது மாறுபாடுகள் இருக்கின்றன. கொரோனா சிகிச்சை வழிமுறைகளிலும் சற்று மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் நன்கு பயிற்சி பெற்றுவிட்டதால், தெளிவாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது கொரோனா தடுப்பு மருந்துகளும் கட்டமைப்பு வசதிகளும் நன்றாகவே உள்ளது.

வயதுவாரியான பாதிப்புகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? தற்போது இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறதே? 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்பு பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய்கள் உள்ளவர்களுக்கும் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. ஆனால், தடுப்பூசி நம்மிடம் இருப்பதால் பயப்படவேண்டிய அவசியமில்லை. கொரோனா என்ற ஒன்றே இல்லை. இது ஏமாற்றுவேலை என்று மக்கள் சொல்கிறார்களே,

இதுகுறித்து உங்கள் கருத்து? மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் வேலைபார்த்து வருகின்றனர். டெஸ்ட் எடுத்துவிட்டு ரிசல்ட் தராமல் ஏமாற்றவும் முடியாது. எனவே வெளியாகும் தரவுகள் எதுவும் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. இது ஏமாற்றுவேலையும் இல்லை. ஒழிவுமறைவும் இல்லை. எனவே தேவையற்ற வதந்திகளை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் என்ன? ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? 'பல நாடுகளின் தீவிர முயற்சிக்குப்பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி என்பது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரப்பிரசாதம். நானும் தடுப்பூசி எடுத்திருக்கிறேன். இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குப்பிறகு எனக்கு ஆன்டிபாடிகள் அதிகரித்துள்ளது. இதனால் என்னால் தயக்கமின்றி கொரோனா வார்டில் நடமாட முடிகிறது. எனவே தடுப்பூசி பற்றி தவறான வதந்திகளைப் பரப்புவது நமக்குத்தான் ஆபத்தில் முடியும்' என்று கூறியுள்ளார்.

-பாரூக்.

Comments