தாயின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுப்பு! டூவீலரில் சடலத்துடன் 20 கி.மீ. பயணித்த மகன்! அதிர்ச்சி வீடியோ!!

 

  -MMH

கொரோனா அச்சம் காரணமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாயை, ஆம்புலன்ஸில் ஏற்ற ஓட்டுநர்கள் மறுத்ததால், நண்பரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் சிகாகுளம் மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த செஞ்சுலா, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து சொந்த ஊரான கில்லோய் கிராமத்திற்கு தாயின் உடலை எடுத்துச் செல்ல, அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அவரது மகன் அழைத்துள்ளார்.

ஆனால், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, செஞ்சுலாவின் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், என்ன செய்வது என்று புரியாமல், தனது நண்பனை தொலைபேசியின் மூலம் அழைத்து, தாயின் சடலத்தை, இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார்.

உடலை எடுத்துச் செல்லும் போது, சாலையில் காவலர் ஒருவர் அவர்களை மறித்துள்ளார். அப்போது, நடந்ததை அவர்கள் கூறிய நிலையில், அவர் உதவ முன்வராமல், எந்த மருத்துவமனை என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தாயை இழந்து தவிக்கும் ஒருவருக்கு உதவாமல் நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் மரித்த மனிதாபிமானம், இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் செல்லும் போது, 3 பேர் பைக்கில் எதற்காக செல்கிறீர்கள்? எனக் கேள்வி கேட்ட காவலரிடமும் இல்லாமல் போனதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments