24 மணி நேரம்தான்.. 3 போலீஸாரை காவு வாங்கிய கொரோனா.. கதி கலங்கும் சென்னை காவல்துறை..!!

     சென்னை: சென்னையில் ஒரே நாளில் 3 போலீஸார் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறை வட்டாரமே கதிகலங்கி போயுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீயாய் பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரேநாளில் 13,776 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,51,487ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல நேற்றைய தினம் ஒரே நாளில், 78 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மொத்த உயிரிழப்புகள் 13,395 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 95,048 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

இதில் ரொம்ப மோசமாக இருக்கும் மாவட்டம் சென்னைதான். நேற்று 3,727 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 போலீசாரும் அடக்கம் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கடந்த சில நாட்களாகவே டியூட்டியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் போலீசார் பலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோட்டூர்புரம் உளவுப்பிரிவில் தலைமை காவலராக இருந்த கருணாநிதிக்கு கடந்த 13-ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இவருக்கு 48 வயதாகிறது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், கடந்த 21ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை தந்தும், நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.


இதேபோல் SBCID தலைமை கான்ஸ்டபிளாக பதவி வகித்து வந்தவர் எஸ்.முருகேசன். இவருக்கு 51 வயதாகிறது. சுவாசப் பிரச்சினை என்றுதான் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் கொரோனா உறுதியானது. அதனால், செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்ரீதியான பிரச்சினைகளால் நேற்றிரவு உயிரிழந்தார்.

அதேபோல, அண்ணா நகர் போக்குவரத்து விசாரணைப் பிரிவில், ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் எஸ்.மகாராஜன். இவரும் கொரோனா தொற்று ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று விடிகாலை 5 மணிக்கு இவரும் திடீரென உயிரிழந்து விட்டார். இப்படி 24 மணி நேரத்தில் 3 போலீசார் அடுத்தடுத்து உயிரிழந்ததால், காவல்துறை வட்டாரமே சோகத்திலும், கலக்கத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கி உள்ளது.

பொதுமக்களை காக்க, முன்களப் பணியாளர்கள் தற்போது பணியில் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களும் இந்த தொற்று அதிகம் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த 2வது அலையின் வேகம் மும்மடங்கு இருக்கிறதாம். ஏற்கனவே பரவல்போல் அல்லாமல் அறிகுறிகள் இல்லாமலும், இந்த பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments