கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை!!

      -MMH

     தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம்  மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 63). எண்ணெய் வியாபாரியான இவரது வீட்டிற்கு 15.03.2020 அன்று சில  மர்ம நபர்கள்  வந்தனர். வீட்டில் இருந்த அவரது மனைவியை ஒரு தனி அறையில் அடைத்து விட்டு ராமநாதனை படுகொலை செய்தனர். 

மேலும் கொலையாளிகள் ராமநாதன் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவதில்  காவல்துறையினருக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.  அதனைத் தொடர்ந்து   ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.

அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள செல்போன் சிக்னலை ஆராய்ச்சி செய்தனர். அதிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. மிகவும் சிக்கலான  இந்த வழக்கில்  காவல்துறையினர் சமயோசிதமாக செயல்பட்டு பழைய குற்றவாளிகளை கண்காணிக்க தொடங்கினர். அதனடிப்படையில் சில குற்றவாளிகள் சிக்கினர். அவர்களின் செல்போன் எண்களை  ஆய்வு செய்த காவல்துறையினர் அவர்களுக்கும் தற்கொலைக்கு உள்ள தொடர்பை கண்டறிந்து மேலும் சில குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த கொலை-கொள்ளை தொடர்பாக கும்பகோணம் ஆழ்வான்கோயில் தெருவைச்  சேர்ந்த தங்கபாண்டியன், மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், தஞ்சாவூரைச்  சேர்ந்த ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட(விரைவு) கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீல் பரணீதர், கூடுதல் தலைமை வக்கீல் சண்முகம் ஆகியோர் வழக்கை ஏற்று நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு கூறினார்.

இதில் கொலைக்குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆண்டு்கள் கூடுதல் சிறைதண்டனையும் விதிக்கப்படுவதாக கூறி இந்த தண்டனைகளை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகளும், 50 க்கும் மேற்பட்ட  அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி நேற்று கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான காவலர்கள்  குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அறிக்கை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவலர்களை அனைவரும் பாராட்டினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments