கும்பகோணம் அருகே முகக் கவசம் அணியாமல் சென்ற இளைஞரை தாக்கிய காவல்துறை!!
கும்பகோணம் அருகே முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுவெளியில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியினை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி பகுதியில் காவல்துறையினர் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த சுந்தர் மகன் பிரவீன்(25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் முககவசம் அணியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து அவர் தனது வாகனத்தினை சாலையின் ஓரமாக நிறுத்துவதற்காக காவல்துறையினரை தாண்டி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்கிறார் என நினைத்த காவலர்கள் அவர் மீது லத்தியால் தாக்கி உள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கு விளம்பரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு மீது மோதியது.
இதில் காலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பட்டீஸ்வரம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களைக் காப்பதற்காக தான் காவல்துறை இருக்கிறதே தவிர மக்களை தாக்குவதற்காக அல்ல. பொதுமக்களும் தங்கள் கடமையை உணர்ந்து நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments