கொரோனா விஷயத்தில் மோடி பொறுப்பைக் கைகழுவிவிட்டார்! சர்வதேச ஊடகங்கள் கடும் விமர்சனம்!!

  -MMH

      சர்வதேச ஊடகங்கள், 'கொரோனா விவகாரத்தை இந்தியா சரியாகக் கையாளவில்லை’ எனக் கடுமையாகக் கண்டித்துவருகின்றன. இதை மோடியின் தோல்வியாக வர்ணித்துவருகின்றன.

உலகப் புகழ்பெற்ற டைம் இதழில், இந்திய இதழியலாளர் ராணா அய்யூப் எழுதியிருக்கும் கட்டுரையில் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஓர் இக்கட்டான காலகட்டத்தில் தமது பொறுப்பை அவர் கைகழுவிவிட்டார் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கட்டுரையில் மத்திய அமைச்சர்களையும், இந்தியாவின் மேல்தட்டு மக்களையும் விமர்சித்திருக்கிறார். கொரோனா அலை முற்றுப்பெறாதபோதே, `வெற்றிகரமாக கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர் மோடி’ என மத்திய அமைச்சர்களும், இந்தியாவின் மேல்தட்டு மக்களும் புகழ்ந்து தள்ளினார். உண்மை நிலை என்ன? பொருளாதாரரீதியாகப் பின் தங்கிய மக்கள் எத்தகைய இடரை எதிர்கொள்கின்றனர் என்பதைக் கிஞ்சித்தும் உணராமல் தட்டுகளைத் தட்டியவர்கள் அவர்கள்.

இப்படியான சூழலில் கும்பமேளாவை அனுமதித்தது பெருந்தவறு' என்றும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தத் தோல்விக்கான பொறுப்பை மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைப்பதாக அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்:

வாஷிங்டன் போஸ்ட், தனது எடிட்டோரியல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், `நிலைமையை உணராமல் மிக விரைவாகத் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்தான் இந்தியாவின் இப்போதைய நிலைக்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

தியேட்டர்கள், ஸ்டேடியம், கும்பமேளா என எங்கும் எதிலும் கூட்டம். இதுதான் வைரஸ் பரவலைத் துரிதப்படுத்தியது. கொத்துக் கொத்தாக மக்கள் மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர். ஆக்ஸிஜன் இல்லை. இதனால் இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பே சிதையும் நிலையில் உள்ளது' என்றும், 'இவ்வளவு மோசமான நிலை வராமல் தவிர்த்திருக்க முடியும்' என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதீத நம்பிக்கை, சுயதிருப்தி:

பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைதான் இந்தியாவின் இந்தநிலைக்குக் காரணம் என கார்டியன் தளத்தின் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திமிர்பிடித்த மற்றும் திறமையற்ற அரசின் செயல்பாடுகள்தான் இந்தியாவை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டிருப்பதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் அனைத்தையும் மத்திய அரசு செய்துவிட்டு, இப்போது பொறுப்பை மாநில அரசுகளிடம் திணிப்பதாகவும் அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுயதிருப்தியும், தவறான நடவடிக்கைகளும்தான் இந்தியாவின் இந்தநிலைக்குக் காரணம் என்ற தொனியில் தி நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியன் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையும் இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தநிலையைத் தவிர்த்திருக்க முடியும். உலக ஊடகங்கள் மட்டுமல்ல, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியரின் நிலைக்கு பிரதமர் மோடி என்ன பதிலளிக்கப்போகிறார்? குறைந்தது தார்மீகப் பொறுப்பாவது ஏற்பாரா?

- பாரூக்.

Comments