கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி. மனு..!!

-MMH

                        கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரத்தை தாண்டி பரவுவது கவலையளிக்கிறது. தொற்றால் பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்ப முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஓய்வின்றி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.  முன் களப்பணியாளர்கள் பணிச்சுமையால் தளர்ந்து விட்டால் ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் சீர்குலைந்து போகும் ஆபத்து உள்ளது. பணிச்சுமையால் செவிலியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. தங்களுக்கு ஓரிரு நாட்களாவது ஓய்வு வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

ஊழியர்களின் பணிச்சுமையை கணக்கில் கொண்டு உடனடியாக தங்களின் அதிகாரத்திற்குட்பட்டு தேவைக்கேற்ப மருத்துவ ஊழியர்களை நியமிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும்.

இதேபோன்று காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரும் ஏற்பாடுகள் கடந்த முதல் அலையின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதித்தவர்கள் சோதனை முடிவு அறிந்தவுடன் நேரடியாக பேருந்து, ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து மூலம் மருத்துவமனைக்கு செல்கிற நிலை உள்ளது. இது மேலும் தொற்று பரவலை அதிகப்படுத்தும். தொற்று பாதித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வருகிற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உடனடியாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றை சிகிச்சை மையங்களாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவசரத் தேவைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகள் தனியார் விடுதிகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் மருத்துவமனைகள் கணக்கு வழக்கின்றி கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்காணிக்க அரசு தரப்பில் இருந்து குழுக்களை அமைக்க வேண்டும் இதேபோன்று கொரோனா தடுப்பூசி மே.1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோவை மாவட்டத்தின் தற்போதைய நிலவரப்படி தடுப்பூசிகள் கைவசம் ஏதும் இருப்பு இல்லை. 

மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட குறிப்பிட்ட இடங்கள் என தீர்மானிக்காமல் பரவலாக இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தடுப்பூசியை செலுத்த அனைத்து இஎஸ்ஐ டிஸ்பென்சரி (மருந்தகம்) கிளைகள், ஊராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சி அலுவலகங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.  கோவை மாவட்டத்தில் இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்.” இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம் பி வலியுறுத்தியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

I.அணஸ்,V. ஹரிகிருஷ்ணன்.


Comments