பிள்ளையார்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு! கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

 

-MMH

         சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கோவில் அறங்காவலர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு வழி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கொரோனா பாதித்த, தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், முகக் கவசம் அணியாதோர் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற நோய்கள் உள்ளோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டோர் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். கோயில் வளாகத்தில் எச்சில் உமிழ்தல், அசுத்தப்படுத்துதல் கூடாது.

பக்தர்கள் கால்களை நீராலும் கைகளை கிருமிநாசினியாலும் சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை அறிந்த பிறகுதான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிற்றுண்டிச் சாலைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். சுவாமி சிலைகளை தொடுவதையும், தேங்காய், பூ, பழம் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழா, வீதி உலா, போன்றவற்றில் அரசின் இயக்க நடைமுறை அமலில் இருப்பதால் கோயில் வழக்கப்படியும், ஆகம விதிகள்படியும் பூஜை கைங்கரியங்கள் நடைபெறும். பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் பக்தர்கள் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments