கொரோனாவால் இறந்தவர்களை மத சம்பிரதாய படி அடக்கம்!!

   -MMH

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலையிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் கோவையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை இஸ்லாமிய அமைப்பினர் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அடக்கம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணியில் தங்களை ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் 250 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

 

கொரோனாவால் இறந்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ அவர்கள் மத சம்பிரதாய படி குடும்பத்தினரை மத சடங்குகள் செய்ய வைத்த பின்னரே அடக்கம் செய்து வருவதாகவும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் இதுவரை 75 உடல்கள் அடக்கம் செய்து கொடுத்து இருக்கின்றோம் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அரசின் வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த  அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் , ஒரே நபர்களை பயன்படுத்தாமல் சுழற்சி அடிப்படையில் தங்கள் அமைப்பினரை இந்த பணியில் ஈடுபடுத்தபடுத்துவதாகவும், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை குறித்து வகுப்புகள் நடத்திய பின்னரே இந்தப் பணியில் ஈடுபடுத்துவதாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குழுவினர் கூறுகையில், மதங்களைக் கடந்து மனித நேயத்தை போதிக்கும் வகையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும், அவர்களின் மத வழங்கங்கள் பாதிக்காத வகையில் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கின்றனர்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கூறுகையில், கோவையில் தங்கள் அமைப்பின் சார்பில் 50க்கும் அதிகமாக உடல்களை பெற்று அடக்கம் செய்து இருப்பதாகவும், இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் தயங்குவதால், எங்களை தொடர்பு கொள்கின்றனர் எனவும் அப்படி அழைப்பவர்கள் கொடுக்கும் பொருளாதார உதவிகளை வாங்குவதில்லை எனவும்  தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கோவையில் இதுவரை 138 சடலங்கள் அடக்கம் செய்து இருக்கின்றோம் எனவும் அவரவர் மத முறைபடி இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்து இருப்பதாக  தெரிவிக்கின்றனர். வசதியானவர்கள் அடக்கம் செய்ய பணம் கொடுக்கின்றனர், ஏழைகளிடம் பணம் கேட்பதில்லை என தெரிவிக்கும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர்,கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களுக்கு இறுதி சடங்கு செய்ய தேவைப்படும் பொருட்களை தமிழக அரசே வழங்க வேண்டும் எனவும் என தமமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழி தோண்ட ஜே.சி.பி இயந்திரம், பிளிச்சிங் பவுடர், காடா துணி, பிபிஇ கிட் போன்றவை வழங்கப்பட்டால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வசதியாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவரான முஜீபூர் ரகுமான் கூறுகையில், கோவையில் இதுவரை 250க்கும் மேற்பட்ட சடலங்களை பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் இஸ்லாமிய அமைப்புகள் அடக்கம் செய்துள்ளனர். சாதி , மத வேறுபாடுகளை கடந்து  இஸ்லாமிய இயக்கத்தினர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை இறைவனுக்கு செய்யும் பணி என நினைப்பதாக தெரிவிக்கிறார்.

-பீர் முஹம்மது , குறிச்சி.

Comments