முந்தைய அலையின்போது உதவிகள் வழங்கியதுபோல இப்போதும் தமிழக அரசு திட்டமிட வேண்டும்!!

    -MMH

    இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்கெனவே வெவ்வேறு அளவிலான ஊரடங்கு நோக்கி நகர்ந்துவரும் நிலையில், '14 நாள் ஊரடங்கை மாவட்ட, நகர, மண்டல அளவில் மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும்' என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருப்பது தமிழ்நாட்டுக்கு ஓர் எச்சரிக்கை மணி. ஊரடங்கு தேவைப்படாத ஒரு காலகட்டத்தில் முன்னேற்பாடுகள் இன்றி மிகத் தீவிரமாக அதை அமலாக்கி அதற்குப் பெரிய விலையைக் கொடுத்த அனுபவம் ஏற்கெனவே நமக்கு உண்டு. 'கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடைசி வழிமுறையாக இருக்கட்டும்' என்று பிரதமர் மோடி பேசியது அதனாலேயே பலருக்கும் ஆசுவாசமானதாக இருந்தது. ஆனால் பல்கிப்பெருகும் தொற்றாளர்கள் எண்ணிக்கையால் மருத்துவத் துறையினர் திணறுகிறார்கள்.

பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை ஒரு முக்கியமான வழிமுறையாக நிபுணர்கள் பரிந்துரைக்கும்போது எந்த மாநிலமும் அதை முழுமையாகத் தவிர்த்திட முடியாது. அதேசமயம் ஊரடங்கின் பெயரால் மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிவிடக் கூடாது. விளைவாகவே வார இறுதி நாட்கள் மாலையிலிருந்து அதிகாலை வரை என்று வெவ்வேறு வகையிலான ஊரடங்கை மாநிலங்கள் அமலாக்கிவருகின்றன.

மே மாதம் தமிழ்நாடு ஒரு பேரலைக்கு முகங்கொடுக்க வேண்டும் என்று கணிக்கப்படும் சூழலில் பலர் ஒரே இடத்தில் பணியாற்றும் தொழிற்சாலைகள் - வணிக நிறுவனங்களை எப்படிக் கையாள்வது என்று தமிழக அரசு முன்கூட்டித் திட்டமிட வேண்டும். முழு இயக்கத்துக்கும் அனுமதிப்பது. பிறகு திடீரென ஒரேடியாக இழுத்து மூடுவது என்று முடிவெடுத்தால் நிறுவனங்களும் சரி, தொழிலாளர்களும் சரி, பெரிய அளவிலான பாதிப்புக்கு ஆளாவார்கள். கரோனாவின் முந்தைய அலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படியான இன்னல்களுக்குள் தள்ளப்பட்டார்கள் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 'புலம்பெயர் தொழிலாளர்கள்' என்று குறிப்பிடும்போது மாநிலங்களிடையே புலம்பெயர்ந்திருப்பவர்களை மட்டும் அல்ல, மாவட்டங்களுக்கு இடையே புலம்பெயர்ந்திருப்பவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். வேலையும் வருமானமும் இல்லாத ஒரு காலகட்டத்தைச் சொந்த ஊரில் கழிப்பதே பெரும்பாலானோருக்கு உகந்ததாக இருக்கும். 

இதற்கு அவர்கள் திட்டமிட வேண்டும். திடீரென அறிவிப்புகள் வெளியிடப்படும்போது கூட்டம் கூட்டமாக வெளியேறுபவர்கள் அதன் வாயிலாகவே தொற்றுக்கு ஆளாகக் கூடும். ஊரடங்குக்கான அடுத்த திட்டமிடல் வறியவர்களுக்கு உணவளிப்பதாகும். 70% பேர் ஊதியக் குறைப்பை எதிர்கொண்டும், 30% பேர் அன்றாடப்பாட்டுக்காக நிதியுதவியை எதிர்பார்த்தும் காத்திருக்கும் இந்த ஓராண்டில் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, முந்தைய அலையின்போது உதவிகள் வழங்கியதுபோல இப்போதும் தமிழக அரசு திட்டமிட வேண்டும். ஊரடங்கை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாதது என்றால், முன்கூட்டிய திட்டமிடலும், அறிவிப்புமே உசிதமான வழி.

-சுரேந்தர்.

Comments