இரண்டாவது கணவர் கொன்று புதைப்பு! இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மனைவி உட்பட மூவர் கைது!

-MMH

   தென்காசியை அடுத்த குத்துக்கல் வலசை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மனைவி 33 வயதான அபிராமி. இவர் அதே பகுதியில் ப்யூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கணவர் தங்கராஜ் நான்கு வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினை காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதால், தன் இரண்டு பிள்ளைகளுடன் அபிராமி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, தென்காசி - மதுரை சாலையிலுள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பணிபுரிந்த காளிராஜ் என்பவருடன் அபிராமிக்குப் பழக்கம் ஏற்பட்டது.

இருவருக்கும் இடையே 13 வயது வித்தியாசம் இருந்ததால் காளிராஜின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காளிராஜூவிற்கு அபிராமியுடனான தொடர்பை விட மனமில்லை. இதன் பின் 2017- ஆம் ஆண்டு அபிராமியைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொண்டார், காளிராஜ். இந்தச் சூழலில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காளிராஜைக் காணவில்லை.

இதுகுறித்து அவரது தாய் கேட்டபோது, தன்னிடம் சண்டை போட்டு விட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அபிராமி பதிலளித்து சமாளித்துள்ளார். பல மாதங்கள் காளிராஜின் தாய், அபிராமி வீட்டிற்கு வந்து தகராறு செய்த நிலையிலும் காளிராஜ் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அதனால் தென்காசி காவல்நிலையத்தில் காளிராஜின் தாய் புகாரளித்தார்.

காவல்துறை அபிராமியிடம் விசாரித்த போது அவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் காவல்துறையினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் வரவில்லை. இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த புகாரை போலீசார் சமீபத்தில் துாசிதட்டி எடுத்து, அபிராமியிடம் துருவித் துருவி விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. 

விசாரணையில், தன்னை விட 13 வயது குறைந்த காளிராஜூடன் அபிராமி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போதே அது கசந்திருக்கிறது. அபிராமிக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சமூகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்க பெயரளவுக்கு கணவன் என்ற பெயரில் காளிராஜை அவர் திருமணம் செய்துள்ளார். 

அதன்பின், அபிராமிக்கு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இது காளிராஜூக்குத் தெரியவர, பிரச்சினையானது. அவர் இருந்தால் தனக்கு இடையூறு எனத் திட்டமிட்ட அபிராமி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காளிராஜூவுக்கு மயக்க மருந்து கொடுக்க, அவர் தூங்கியபோது மாரிமுத்துவை அபிராமி அழைத்து வந்துருக்கிறார். பின்பு மாரிமுத்து, அபிராமி ஆகிய இருவரும் காளிராஜின் கழுத்தை நெறித்தும், கத்தியால் நெஞ்சைக் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் அபிராமியின் வீட்டில் அன்றாடம் பால் ஊற்றி வரும் பால்காரர் முருகேசன் என்பவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரிடம் உடலை மறைக்க உதவிக் கேட்டதில் மறுத்த அவரோ, வீட்டிலேயே புதையுங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அபிராமியும், மாரிமுத்துவும் சேர்ந்தே காளிராஜுவின் உடலை வீட்டில் புதைத்துவிட்டு ஒன்றுமறியாதவர்கள் போல் நாடகமாடியுள்ளனர். அந்த இடத்தின் மீது துளசி மாடத்தையும் வைத்து விட்டார் அபிராமி. பிணத்தின் மீதே இரண்டரை வருடம் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் பின்பு, அவர்கள் காட்டிய இடத்தைத் தாசில்தார் முன்னிலையில் தோண்டியபோது மண்டை ஓடு மற்றும் எழும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அதன் பின்னர் அபிராமி, மாரிமுத்து மற்றும் கொலைச் சம்பவம் என்று தெரிந்தும் தகவலை மறைத்த பால்காரர் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் தென்காசி காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மூன்றாம் கண்.

Comments