கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்கு..!! தஞ்சை எஸ்பி அறிவிப்பு!!!
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அதை பின்பற்ற மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் தேஸ்முக் சேகர் அவர்கள் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காவல்துறையினர் பகலிலும் இரவிலும் ரோந்து பணியில் மேற்கொள்கின்றனர். கீழவாசல் பகுதிகளில் முக கவசம் அணியாத கடை விற்பனையாளர் களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அந்த வழியே முக கவசம் அணியாமல் செல்வோருக்கும் அபராதம் விதிப்பதை காணமுடிந்தது.
இரவு நேர ஊரடங்கின் இரண்டாவது நாளான நேற்று இரவு 9 மணியளவில் கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்வதை காண முடிந்தது. பெரும்பாலான பகுதிகளில் 10 மணிக்கு மேல் அசாதாரண அமைதி நிலவியது. 7 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில் நிலையத்தில் ரயில் செல்லும் சத்தத்தை செவிகளால் உணர முடிந்தது. இதன்மூலம் நகரம் எவ்வளவு நிசப்தமாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் இரவு ஊரடங்கை பின்பற்றினாலும் வழக்கம்போல் ஒரு சிலர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சென்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
அவர்களை பணிகளில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இரவு நேரத்தில் செல்வதற்கான காரணத்தை கேட்டறிந்த பின்னர் அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர். காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் திரு சேகர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல் இரண்டு நாள் விதிமுறைகளை பின்பற்றாதவர்களை எச்சரித்து அனுப்பி விடுவதாகவும் வருகின்ற நாட்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோய்த்தொற்றின் தீவிரம் அறியாமல் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பணியில் இருந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு பத்து மணிக்குள் வீட்டிற்கு சென்று பாதுகாப்புடன் இருக்குமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments