வாட்ஸ்அப் பதிவுக்கு குரூப் அட்மின் பொறுப்பல்ல! மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி! அட்மின்களுக்கு நிம்மதி!
வாட்ஸ்அப் குரூப்களில் வெளியாகும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு குரூப் அட்மின்கள்தான் பொறுப்பு என்று கூறி அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிடப்படும் தகவல்கள் பெரிய அளவில் சண்டையில் போய் முடிந்துவிடுவதும் உண்டு. வன்முறையை தூண்டும் மற்றும் ஆட்சேபகரமான பதிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில் குரூப் அட்மின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
அது போன்ற ஒரு வழக்கு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பதிவு செய்யப்பட்டது. கிஷோர்(33) என்பவர் ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி இருந்தார். அக்குரூப்பில் இருந்த ஒரு உறுப்பினர் மற்றொரு பெண் உறுப்பினருக்கு எதிராக ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டார். இதையடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அப்பெண், குரூப் அட்மின் கிஷோரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு, குரூப்பிலிருந்து ஆட்சேபகரமான தகவல்களை பதிவிட்ட நபரை நீக்கவும் இல்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் குரூப் அட்மின் கிஷோர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி கிஷோர், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.ஹாக் மற்றும் பி.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `வாட்ஸ்அப் குரூப் அட்மின் கிஷோர் பெண் உறுப்பினருக்கு எதிராக ஆட்சேபகரமான பதிவுகளை பதிவிட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அதோடு அந்த உறுப்பினரை குரூப்பில் இருந்து நீக்காமல் இருந்ததோடு, அவரை பெண் உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்கும்படி கேட்டுக்கொள்ள தவறிவிட்டார்’ என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையின் இறுதியில் கிஷோர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், `வாட்ஸ்அப் குரூபில் ஒரு உறுப்பினர் பதிவிடும் தகவல்களுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியுமா என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது. மொபைல் ஆப்பில் இயங்கும் வாட்ஸ்அப் குரூப்பில் உறுப்பினரை நீக்கவும், சேர்க்கவும் மட்டுமே அட்மினுக்கு அதிகாரம் இருக்கிறது.
குரூப் தொடங்கப்பட்டு விட்டால் அதில் உள்ள உறுப்பினர்கள் தகவல்களை குரூப்பில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அட்மினுக்கு உறுப்பினர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ மட்டுமே முடியும். ஆனால் அதில் வரக்கூடிய தகவல்களை பதிவிடுவதற்கு முன்பு தணிக்கை செய்யும் அதிகாரம் குரூப் அட்மினுக்கு கிடையாது.
குரூப்பில் இது போன்ற ஆட்சேபகரமான தகவல்களை பதிவிடும் தகவல்களுக்கு அதனை பதிவிட்ட உறுப்பினர்தான் பொறுப்பாவார். அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். குரூப் அட்மின் அதற்கு பொறுப்பாக முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பு மூலம் வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்ய எந்தவித வசதியும் இல்லை. ஆனால் இப்பதிவுகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அரசுக்கு எதிரான மற்றும் மத உணர்வுகளை தூண்டும் விதமான, வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் வந்ததால் அதனை அரசு தடை செய்தும் வருகிறது.
- சிவகங்கை மாவட்ட நிருபர்கள் குழு.
Comments