12 ஆண்டுகளுக்கு பின், இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்!!!

 

-MMH

     மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்கு பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார். ஸ்டாலின் இன்று மதியம் 12:00 மணிக்கு மேல் மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு செல்கிறார். 2009ல் திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, மத்திய அமைச்சராக அழகிரி இருந்த போது, மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். உட்கட்சி மோதல் காரணமாக அதன்பின் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், அதுவும் முதல்வராக ஸ்டாலின் அண்ணனை சந்திக்க வருகிறார். அவரிடம் வாழ்த்து பெற்று விட்டு, குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதுகுறித்து மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக செயல்படாமல் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் அமைதி காத்தனர். தி.மு.க. வெற்றி பெற்றதும் 'அண்ணன் என்ற முறையில், என் தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவரை பார்த்து பெருமைப்படுகிறேன்' என அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கும் அழகிரி குடும்பத்தினருக்கு அழைப்பு விடப்பட்டது. அதன்படி அழகிரி மகன் தயாநிதி, மகள் கயல்விழி பங்கேற்றனர். கடந்த 6ம் தேதி இருவரும் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். அப்போது அழகிரி உடல் நலம் குறித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். அண்ணன் - தம்பி இடையிலான அரசியல் பகை முடிந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்!!!

நாளை வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments