25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ! - எதிர்பார்ப்பில் மன்னார்குடி மக்கள்..!!
மன்னார்குடி:
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 1989-ம் ஆண்டு திமுக-வைச் சேர்ந்த கே.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது திமுக-தான் ஆட்சி அமைத்தது. 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இங்கு அதிமுக-வைச் சேர்ந்த கே.சீனிவாசன் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு மன்னார்குடித் தொகுதிக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கிடைக்கவே இல்லை.
2011 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா வெற்றிபெற்றார். ஆனால், அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. இதனால் இந்தத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கலங்குகிறார்கள் மக்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டார் டி.ஆர்.பி.ராஜா. கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கப்போகிறது. என்னை வெற்றிபெறச் செய்தால் மன்னார்குடியை மின்னும் மன்னையாக்குவேன என வாக்குறுதி கொடுத்தார் ராஜா. ஆனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. சாலை வசதிகள், குடிநீர், பாதாளச் சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம், நீடாமங்கலம் ரயில்வே கேட் மேம்பாலம் உள்ளிட்ட மிக முக்கியமான தேவைகளை நிறைவேற்றப்படாததால், மன்னார்குடி மக்கள் மிகுந்த விரக்தி அடைந்தார்கள்.
1970-களில் தமிழக கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த, மன்னார்குடியின் மண்ணின் மைந்தரான மன்னை நாராயணசாமி காலத்தில் இந்தத் தொகுதி சிறப்பான வளர்ச்சி அடைந்தது. அரசு கலைக் கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை ஆகியவை கொண்டுவரப்பட்டன, அவர் இல்லையென்றால் மன்னார்குடி இன்னும் மிக மோசமான நிலையில் இருந்திருக்கும். டி.ஆர்.பி.ராஜாவை நாங்கள் பெரிதும் நம்பினோம். ஆனால் இவரால் தொகுதிக்கு எந்தப் பலனும் இல்லை என இப்பகுதி மக்கள் நொந்துகொண்டார்கள். பத்தாண்டுகளாக இதே ஆதங்கம் நீடித்தது. என்னோட தொகுதிக்கு நான் நிறைய செய்யணும்னுதான் நினைக்குறேன். ஆனால் அதிமுக அரசு வேண்டுமென்றே புறக்கணிக்குது என டி.ஆர்.பி.ராஜா புலம்பித் தீர்த்துக்கொண்டிருந்தார். இந்தநிலையில்தான் தற்போது இவர் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். திமுக ஆட்சி அமைக்கிறது. இனி டி.ஆர்.பி.ராஜா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அமைச்சராகவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் மன்னார்குடி மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு, நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பார்த்திபன், ரைட் ரபீக், ஈசா.
Comments