தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!!

 

-MMH

          தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்ட மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

முதல்வரின் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 35,000-ஐ கடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 500 நெருங்கி உள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதால் கொரோனா தொற்று குறைய நேரிடலாம் என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments