மே 4 அக்னி நட்சத்திரம்!!

  -MMH

மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை, சேலம், மதுரை, திருச்சி, வேலூர் போன்ற பல மாவட்டங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது பதிவாகி வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோய்ப் பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை பெரிதாக பொதுமக்கள் உணரவில்லை. அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா 2 ஆவது அலையால், நோய் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்துடன் ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் முழு ஊரடங்கையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால், பகலில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழையும் பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது என்றாலும், வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

கத்திரி வெயில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் நுங்கு, இளநீர் போன்றவற்றையும் உட்கொண்டு உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மக்களின் வழக்கம். அதனை இந்த ஆண்டும் கடைபிடித்து வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியன் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறான். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் 2 வாரங்களில் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்று ஜோதிடர்கள் கூறுவர்.

அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் பகுதி  நாட்களை மக்கள் பின் ஏழு, முன்னேழு என கூறி கணக்கிடுவது வழக்கம்.

-பீர் முகமது.

Comments