மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் வந்தாச்சு!!

   -MMH

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் மே 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் 20 ஆம் தேதி காலை 4 மணி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

1) அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

2) பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3) மளிகை, பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்த தடையும் இன்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது

4) அனைத்து உணவுகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும்.தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

5) உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

6) திரையரங்குகள் செயல்படாது

7) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை

8) ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I. அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments